காஞ்சிபுரம் என சொல்வதைவிட படத்தின் தலைப்புக்கேற்றார் போல காஞ்சிவரம் எனத்தான் செல்ல வேண்டும் பேருக்கேற்றார் போலவே வரம் வாங்கி வந்த நகரம் பல்லவர்களின் தேசம், பட்டு நெசவில் கொடி கட்டி பறந்த நகரம்.
நெசவாளர்களின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டு இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார். 2009 மார்ச் மாதம் 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. இதற்கு முன்னரே 12 செப்டம்பர் 2008 இல் Toronto International Film Festival இல் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளிக்குவித்திருக்கிறது.
திருவேங்கடம் கதையின் நாயகன் பட்டு நெசவில் திறமையானவர் வித்தியாசமான வடிவங்களில், நிறங்களின் கலவையில் மாற்றத்தை ஏற்படுத்தி பட்டுப்புடவை நெசவு செய்வதில் வல்லவர்.
இந்த படத்தோட கரு வேங்கடம் தனக்கு பிறக்கும் பெண் குழந்தையிடம் உனக்கு கல்யாணம் நடக்கும் போது பட்டுப் புடவை கட்டிதான் அனுப்புவேன் என வாக்கு கொடுக்கிறார். அதை நிறைவேற்ற அவர் படும் கஷ்டங்களையும் அவமானங்களையும், நெசவாளர்களின் வாழ்வியலோடு சேர்த்து தந்திருக்கிறார்கள். இறுதியில் அவர் பெண்ணுக்கு பட்டுப் புடவை கட்டி திருமணம் செய்து வைத்தாரா என்பது கதையின் முடிவு.
கதையின் ஆரம்பத்தில் வேங்கடம் சிறையில் இருந்து இரண்டு நாள் ஜாமீனில் வெளியே வருகிறார். அவருடன் இரண்டு காவலர்கள் பேருந்தில் காஞ்சிபுரம் நோக்கி பயணிக்கிறார்கள். 1948 இல் படம் தொடங்குகிறது. பேருந்தில் பயணிக்கும் போது பேருந்தில் நடக்கும் சில நிகழ்வுகள் அவரது கடந்த காலத்தை நினைவூட்டுவதால் பழைய நினைவுகள் தோன்றி கடந்த காலத்தை நோக்கி கதை நகர்கிறது.
வேங்கடம் திருமணம் முடித்து தன் மனைவி அன்னத்துடன் ஊருக்குள் வருவதில் தொடங்குகிறது. அப்போது ஒரு பாட்டி “என்ன வேங்கடம் பட்டுப்புடவை கட்டித்தான் பொண்ண கட்டிக்கிட்டு வருவேன்னு சொன்ன..!?” என்கிறார். சிறுவயதில் இருக்கும்போது, தனக்கு திருமணம் நடக்கும்போது வரப்போகும் மனைவிக்கு பட்டுச்சேலை அணிவித்து தான் திருமணம் செய்வேன் என்று சபதம் செய்திருந்தார். ஆனால் அவரது சேமிப்பு பற்றாத காரணத்தால் அந்த சபதம் நிறைவேறாமல் போனது.
வேங்கடத்துக்கும், அன்னத்திற்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அப்போது அந்த ஊரின் வழக்குப்படி தந்தை தன் குழந்தைக்கு ஏதாவது செய்கிறேன், என வாக்கு கொடுக்க வேண்டும். அதன்படி வேங்கடம் தன் பெண் குழந்தையின் காதில் “நீ கல்யாணம் முடிச்சு போறப்ப உனக்கு பட்டுப்புடவை கட்டி தான் அனுப்புவேன்” என சொல்கிறார். இதைக் கேட்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஒரு நெசவாளி தன் வாழ்நாள் முழுவதும் சேமித்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்குவது இயலாத காரியம் என சொல்கிறார்கள். அன்னமும் இதனால் வருத்தம் அடைகிறார். அப்போது அன்னத்திடம், தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து காண்பிக்கிறார். நான் எப்படியாவது கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என நம்பிக்கை அளிக்கிறார்.
“மோட்டார் கார் புதுசா வந்திருக்குல்ல” என ஊர் மக்கள் பேசுவதும் அதைக் காண திருவிழா போல ஊர் மக்கள் கூடுவதும் நமக்கே ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது. ஏதோ புதிதாக ஒன்றை பார்ப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.
வேங்கடத்தின் மைத்துனர் வியாபாரத்தில் சரிவை சந்திப்பதால் தங்கையை வேங்கடத்தின் வீட்டிலேயே விட்டுச் செல்ல வருகிறார். “எனது சூழ்நிலை சரியில்லை சரியான பிறகு உங்கள் தங்கையை வந்து அழைத்துக் கொள்கிறேன்” என்கிறார். வேங்கடம் தனது மைத்துனரை அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார். இதனால் வேங்கடத்தின் மைத்துனர் கோபம் கொண்டு எழுந்து செல்கிறார். அப்போது தனது மைத்துனரை அழைத்து தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தை அவரிடம் கொடுக்கிறார். சேர்த்து வைத்த பணம் முழுவதும் கொடுத்தாச்சு பட்டுப் புடவைக்கு என்ன செய்வது என்ற தவிப்பு அன்னத்திற்கு வருகிறது. வேங்கடமும் அதை உணர்ந்து என்ன செய்வதென்றரியாமல் தவிக்கிறார். பின் தான் வேலை செய்யும் இடத்தில் பட்டு நூல்களை திருடுகிறார்.
நாட்கள் நகர்கிறது. ஒரு நாள் அன்னத்தின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. வைத்தியர் நோய் முற்றிவிட்டது, வேண்டுமானால் ஆங்கில மருத்துவம் பார்க்க சொல்கிறார். அன்னத்திடம் பேசும் போது அன்னத்தின் மனநிலையை உணர்ந்தவாரே அவர் வீட்டுக்கு அருகே புடவை நெய்யும் இடத்திற்குத் தூக்கிச் சென்று தான் நெய்துகொண்டிருக்கும் புடவையை காட்டுகிறார். அன்னம் அதை பார்த்து நிம்மதி அடைந்தவராக இறந்து விடுகிறார்.
பிறகு ஒரு நாள் எழுத்தாளர் ஒருவர் ஊருக்கு வருகிறார். வேங்கடம் அவருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த எழுத்தாளர் ஒரு கம்யூனிஸ்ட் என தெரிய வருகிறது. அவர் பட்டு நெசவாளர்களின் மோசமான ஊதியம் மற்றும் அவர்களின் வறுமை இவைகளை சரி செய்ய போராட்டம் ஒன்றுதான் வழி என சொல்கிறார்.
காலப்போக்கில் சக நெசவாளர்களுடன் வேங்கடம், இந்த யோசனையை தழுவி தெரு நாடகங்களையும் தீவிரமாக நடத்துகிறார். அதில் அவர்களுக்கு வேலை கொடுக்கும் ஜமீன்தார் செய்யும் கொடுமைகளையும், அடிமையாய் நடத்துவதையும், நெசவாளர்களுக்கு உணர்த்துகிறார்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் கம்யூனிசம் சட்ட விரோதமாக இருந்தது. ஒருநாள் எழுத்தாளர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். பின் வேங்கடம் போராட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார். நெசவாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் இன்னும் பிற கோரிக்கைகளை வைத்து ஒரு மனுவை முதலாளியிடம் கொடுக்கிறார். முதலாளி அந்த கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார். அந்த மனுவை கிழித்து போடுகிறார். பின் நெசவாளிகள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுத்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
“வெளிமாநிலங்களில் இருந்து வேலை ஆட்களை வைத்துக் கொள்வேன்” என்கிறார், ஜமீன்தார். இத்தருணத்தில் கம்யூனிஸ்ட் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டு விட்டது என ரேடியாவில் கேட்டதாக ஒருவர் சொல்ல, வேங்கடம் நாம் இனி நேரடியாக போராடலாம் என்கிறார்.
நண்பன் மகன் ரங்கன் ஒரு கடிதம் எழுதுகிறான். தாமரையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, மறுநாள் ரங்கனின் அப்பா வேங்கடத்திடம் இதைப் பற்றி பேசும் காட்சி ரொம்பவே அழகாக வந்திருக்கும்.
ராணுவத்தில் இருந்து வருகிறான் ரங்கன், எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது நண்பன் தன் மகனிடம் மாமா அவர் பொண்ணுக்கு பட்டுப்புடவை கட்டி அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்” என சொல்கிறார். பட்டுப்புடவை தயாராகவில்லை என்பதால் வேங்கடத்திற்கு தர்ம சங்கடமாகி போகிறது. கல்யாணத்தை தள்ளி வைக்கவேண்டும் என்கிறார்.
ரங்கனோ விடுமுறை கொஞ்ச நாள் தான் இருக்கு போனா திரும்பி வர எவ்வளவு காலம் ஆகுமோ என்கிறான். பின் திருமணம் செய்வதாக முடிவு எடுக்கப்படுகிறது. அதுவரை போராட்டத்தில் இருந்த வேங்கடம் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது நண்பனுக்கு பிடிக்கவில்லை துரோகம் செய்துவிட்டதாக சொல்கிறார்.
எல்லோருக்கும் முன் துரோகி என்கிறார். வேங்கடம் மீண்டும் மண்டபத்திற்கு சென்று பட்டு நெய்வதை தொடர்கிறார். அப்படியே பட்டு நூல்களை திருடவும், ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறார்.
இந்த காரணத்திற்காகத்தான் அவரை சிறையில் அடைகிறார்கள். வீட்டுக்கு வருகிறார். அப்போதுதான் வேங்கடத்தின் மகள் தாமரை கிணற்றில் தவறி விழுந்து கை கால் வராமல் படுத்து கிடப்பது நமக்கு தெரிய வருகிறது.
தங்கையிடம் தன் மகளை பார்த்துக் கொள்ளுமாறு சொல்கிறார். ஆனால் மைத்துனரோ அதெல்லாம் முடியாது என சொல்லிவிட்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் வேங்கடம். மகளை தூக்கிக் கொண்டு புடவை நெய்யும் இடத்திற்கு செல்கிறார். அன்னத்திற்கு காட்டியவாறு தாமரையிடமும் காட்டுகிறார்.
பின் சாப்பாட்டில் விஷம் கலந்து தன் மகளுக்கு ஊட்டி விடுகிறார். மகள் இறந்து விட, ஓடிப்போய் மகளுக்காக அரைகுறையாக நெசவு செய்த பட்டு புடவையை தறியில் இருந்து எடுத்துக்கொண்டு வருகிறார். அதனை தன் மகளின் பிணத்தின் மேல் போடுகிறார். ஆனால் போதவில்லை, கீழே இழுக்கிறார். தலைக்கு மேலே சென்று மேல் புறமாக இழுக்கிறார். முழுவதுமாக பொருத்த முடியவில்லை.
இந்த தவிப்பு நம்மை கலங்க வைக்கிறது. அப்போது காவலர்கள் போகலாம் என்கிறார்கள். வேங்கடம் சின்னதாக சிரிப்பார். அது அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக நமக்கு தோன்றும்.
பொன்னூஞ்சல் தொட்டிலிலே என்ற பாடலின் இசை ஒலிக்க மனதை கலங்க வைத்து படத்தை முடிக்கிறார்கள்.
இதுதான் தேசிய விருது வாங்கிய இந்த படத்தின் விரிவான கதை. வேங்கடமாக பிரகாஷ்ராஜ் தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். தன் மகளுக்காக பட்டுப் புடவை கொடுப்பேன் என வாக்கு கொடுக்கும்போதும், தான் சேமித்து வைத்த பணம் தனது மைத்துனருக்கு கொடுக்கும்போதும், பட்டுப் புடவைக்காக பட்டு நூல்களை திருடும்போதும், கம்யூனிஸ்ட்டில் சேர்ந்து போராடும்போதும், மகள் திருமணம் நிச்சயம் செய்து விட்டு பட்டுப் புடவை தயாராக பட்டு நூல்களை திருட வேலை நிறுத்தத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்ப செல்லும்போதும், பின் இறுதியாக மகளை பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் விஷம் வைத்துக் கொல்லும் போதும், தன் இயல்பான நடிப்பால் நம் மனங்களை கவர்கிறார் இந்த படத்திற்காக தேசிய விருது இவருக்கு கொடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
மகள் தாமரையாக சம்மு, பிரகாஷ்ராஜுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ரங்கன் பட்டாளத்துக்கு போகும்போது தவிப்பை அடக்க முடியாமல் அழுவது மிகவும் இயல்பு. அப்பாவிடம் பட்டுப் புடவை பற்றி கேட்கும்போது மிகவும் வெகுளியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மற்றும் வேங்கடத்தின் மனைவி அன்னமாக ஸ்ரேயா ரெட்டி ரங்கனாக விமல், காவலராக வரும் ஜார்ஜ் மரியான் தன் தொப்பியில் இருக்கும் முத்திரை தொலைந்து விட அதை கடைசி வரை பொறுத்த முடியாமல் தவிக்கும் நடிப்பு மற்றும பலரின் இயல்பான நடிப்பு சிறிய வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார்கள். எம்.ஜி.ஸ்ரீகுமாரின் பின்னணி இசையில் கண்ணியமான அந்த கால சூழ்நிலையை உணர வைக்கிறார்.
பொன்னூஞ்சல் தொட்டிலிலே பாடல் அழகான தாலாட்டு அதையே இறுதிக் காட்சியின் பயன்படுத்தி இருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். கலை வடிவமைப்பின் அந்த காலத்து தோற்றத்தை நம்பும் அளவிற்கு திறம்பட செய்திருக்கிறார்கள். அதை அப்படியே மாறாமல் தன் ஒளிப்பதிவால் மிக மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. படத்தொகுப்பாளர் அருண்குமார் அதை கண்ணுக்கு எந்த ஒரு நெருடலையும் தராமல் படத்தோடு ஒன்றி போகும் அளவிற்கு தொகுத்திருக்கிறார்.
மதன் மற்றும் விஜய் அவர்களின் வசனம் கவிதை வடிவில் அழகாகவும் சில இடங்களில் இலை மறைவு காய் மறைவாகவும் அற்புதமாக இருக்கிறது. தீபம் சட்டர்ஜி இந்த மாதிரி படங்களுக்கு ஒலியமைப்பு மிகவும் முக்கியமானதாகும் இதை உணர்ந்து சரியானபடி தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில் எல்லா கலைஞர்களும் ஒன்றிணைந்து சற்றும் குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு காவியத்தை தயாரித்தவர் சைலேந்திரசிங். எழுதி இயக்கியவர் பிரியதர்ஷன் இவரின் சிறைச்சாலை படமும் இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட படம் தான் இப்படிப்பட்ட படங்களை திறம்பட எடுத்து அதை பலர் பாராட்டும்படி படைத்திருப்பது சிறப்பு.
1949க்கு பிறகு நெசவாளர்களுக்கான கூட்டுறவு சங்கத்தை பார்த்தசாரதி என்ற கம்யூனிஸ்ட் தலைவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பிறகு காமாட்சி அம்மன் சொசைட்டி என மாற்றப்பட்டது. 79 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இதில் இப்போது 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இன்று பல கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு 50,000 உறுப்பினர்கள் வரை இருக்கிறார்கள். இந்த வாசகத்துடன் படம் நிறைவடைகிறது.
காஞ்சிபுரம் பல சரித்திர குறியீடுகள் உள்ள நகரம் இந்த திரைப்படம் அந்த கால நெசவாளிகளின் வாழ்க்கையை உலக அரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறது.

Excellent, முழு படமும் பார்த்த ஒரு நிறைவு கொடுக்குது நீங்க கதை சொல்கிற விதம்…